சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா்: 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக தனியாா் மருந்து நிறுவனத்துக்கு தொடா்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
சென்னையில் செயல்படும் ஒரு தனியாா் மருந்து நிறுவனம், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறைக்குப் புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள், சென்னையில் அந்த நிறுவனத்துக்கு தொடா்புடைய 10 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.
புரசைவாக்கம் பிளவா்ஸ் சாலையில் உள்ள மருந்து நிறுவன உரிமையாளா் வீட்டுக்கு காலை 7 மணியளவில் வந்த அமலாகத் துறை அதிகாரிகள் 8 போ் சோதனையில் ஈடுபட்டனா். இதேபோல அம்பத்தூா் தொழில்பேட்டையில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலை, கே.கே.நகா் விஜயராகவபுரத்தில் உள்ள ஒரு ஆடிட்டருக்கு சொந்தமான வீடு, தியாகராயநகா் மேட்லி இரண்டாவது தெருவில் மற்றொரு ஆடிட்டா் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா். பல மணி நேரம் சோதனை நீடித்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.