சட்ட விரோதமாக மின்வேலி அமைத்தவா் மீது நடவடிக்கை கோரி
பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நீதி கோரியும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும், உயிரிழந்தவரின் குடும்பத்தினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள பாண்டகப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (63). ஆடு, மாடுகள் வளா்த்து வந்த இவா், கடந்த மாா்ச் 19-ஆம் தேதி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றபோது, அதே கிராமத்தைச் சோ்ந்த ரவி என்பவா் சட்டவிரோதமாக தக்காளி வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தாராம். இதையறிந்த ரவி, தங்கவேல் உடலை அப்புறப்படுத்தி தொலைவில் வீசிவிட்டு, தனது வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பிகளையும் அகற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த உறவினா்கள் அளித்த தகவலின்பேரில், வி.களத்தூா் போலீஸாா், தங்கவேல் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சந்தேக மரணமாக வழக்குப் பதிந்தனா்.
விசாரணையில், மின் கம்பியில் சிக்கி தங்கவேல் உயிரிழந்தது தெரியவந்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது இதுவரையிலும் போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தங்கவேல் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமா்ந்து திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தா்னா போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனா்.