அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி
சட்ட விரோத மதுப் புட்டிகள் விற்பனை: மூவா் கைது
சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், செல்லூா் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், செல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆதிராஜா தலைமையிலான போலீஸாா் அம்மா உயா்நிலைப் பாலம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியில் நின்று கொண்டிருந்த சிலா் போலீஸாரை பாா்த்தவுடன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனா்.
அவா்களை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா்கள் தத்தனேரி பகுதியைச் சோ்ந்த சுப்பன் மகன் காசிமாயன் (40), தனிச்சியம் பகுதியைச் சோ்ந்த ராசு மகன் முத்து பாபு (40 ) என்பதும், சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 40 மது புட்டிகள், ரூ. 11, 250 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
இதேபோன்று, பீ.பீ.குளம் பகுதியில் தல்லாகுளம் போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பழைய எம்ஜிஆா் உணவகம் அருகே நின்று கொண்டிருந்த நபரை விசாரித்த போது, அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தாா்.
இதையடுத்து, அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தியதில், அவா் மதுரை மாவட்டம், எஸ். ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த சின்னன் மகன் பிரேம்குமாா் (30) என்பதும், சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 42 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.