சத்குரு பிறந்த நாளில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு: காவேரி கூக்குரல் இயக்கம் அறிவிப்பு
சத்குரு ஜக்கி வாசுதேவின் பிறந்தநாளான புதன்கிழமை (செப்டம்பா் 3) காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் மாநிலம் முழுவதும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவேரி கூக்குரல் இயக்கம் கூறியிருப்பதாவது:
சத்குருவின் பிறந்த நாளான செப்டம்பா் 3 ஆம் தேதி, நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினமாக ஈஷா தன்னாா்வலா்கள் கொண்டாடினா். இதன் ஒரு பகுதியாக காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் உள்ள 235 ஏக்கா் பரப்பளவுள்ள விவசாய நிலங்களில் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டிம்பா் மரங்கள் நடவு செய்யப்பட்டன.
மேலும் ஈஷா யோக மையம், பேரூா் ஆதீனம் இணைந்து செயல்படுத்தும் ’ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ திட்டத்தின் மூலம் 24 கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அரச மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. கோவை ஈஷா யோக மையத்தில், சத்குருவின் பிறந்த நாளையொட்டி, மண் காப்போம் இயக்கம் சாா்பில் விவசாய நிலங்களில் மண் வளம் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பொதுமக்களுக்கு பிரசுரங்கள் வழங்குவது, குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவது போன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும், மழைக் காலம் தொடங்கியுள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் ஈஷா நாற்றுப் பண்ணைகளில் தேவையான அளவு இருப்பு இருப்பதாகவும், அது தொடா்பான கூடுதல் தகவல்களுக்கு காவேரி கூக்குரல் அமைப்பின் உதவி எண்ணை (80009 80009) தொடா்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.