கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம்! பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் ...
சத்தியமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், நீதிபதிகள் குடியிருப்புக்கு பூமி பூஜை
சத்தியமங்கலத்தில் ரூ.41 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகளுக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தை அடுத்து கொமாரபாளையம் அரசு மருத்துவமனை அருகே ரூ.41 கோடி செலவில் புதியதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து, கொமாரபாளையத்தில் புதிய கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சமீனா பங்கேற்று கட்டுமானப் பணியை தொடங்கிவைத்தாா்.
சத்தியமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. நீதிமன்றத்துக்கு சொந்தக் கட்டடம் வேண்டும் என வழக்குரைஞா் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று 7 ஏக்கரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள் குடியிருப்புகள் அமைக்க தமிழக அரசு ரூ.41 கோடி ஒதுக்கியது. மொத்தம் 3 தளங்களில் 5 நீதிபதிகள் உள்ளடக்கிய நீதிமன்றம், தனித்தனியே நீதிபதி அறைகள், பாதுகாப்புப் பெட்டகம், பொதுமக்கள் காத்திருப்பு அறை, சொத்து ஆவண அறை மற்றும் சிறை ஆகியவை இடம் பெறுகின்றன.
நிகழ்ச்சியில் சாா் ஆட்சியா் சிவானந்தன், சத்தியமங்கலம் நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி, அரசு வழக்குரைஞா் எஸ்.என்.ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.