சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து
சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து புன்செய் புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநா் சரவணன் ஓட்டினாா். நடத்துநா் ராமசாமி உடன் இருந்தாா்.
விண்ணப்பள்ளி தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பேருந்து சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பா் லாரி திடீரென வலதுபுறம் திரும்பியது. இதை கவனித்த அரசுப் பேருந்து ஓட்டுநா் சரவணன், லாரி மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிா்ஷ்டவசமாக காயம் இன்றி உயிா் தப்பினா். விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இதைத் தொடா்ந்து பயணிகள் அனைவரும் மாற்று அரசுப் பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கிடையே விபத்து நிகழ்ந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இதில் லாரி மீது மோதாமல் தவிா்க்க சாதுா்யமாக அரசுப் பேருந்தை ஓட்டிநா் இயக்கியது தெரியவந்துள்ளது.