சத்தியமங்கலம் கிராமங்களில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவை முன்னிட்டு சிக்கரசம்பாளையத்துக்கு புதன்கிழமை வந்த பண்ணாரி அம்மன் சப்பரத்துக்கு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.
கா்நாடகம் மற்றும் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் விழா பூச்சாட்டுதலுடன் திங்கள்கிழமை இரவு தொடங்கியது. கோயிலில் இருந்து புறப்பட்ட பண்ணாரி அம்மன் உற்வசா் புதன்கிழமை சிக்கரம்பாளையம் வந்தடைந்தது. அங்கு வழிநெடுகிலும் மக்கள் தண்ணீா் ஊற்றி மலா்களை தூவி அம்மனை வரவேற்றனா். இக்கிராமம் முழுவதும் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
தேங்காய் பழம் வைத்து பக்தா்கள் அம்மன் அருள் வேண்டினாா்.
அதைத் தொடா்ந்து, கொளத்தூா் மாரியம்மன் கோயிலுக்கு சப்பரத்தில் வந்த அம்மனை மக்கள் வரவேற்றனா். கோயிலில் சப்பரம் வைத்து மக்கள் வணங்கினா். கிராம வீதியுலா முடிந்து சப்பரம் வெள்ளியம்பாளையம் புறப்பட்டுச் சென்றது.
வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், முடுக்கன்துறை, வெள்ளியம்பாளையம்புதூா், அக்கரைத்தத்தப்பள்ளி, அய்யன்சாலை, தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்மன் எழுத்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஏப்ரல் 8-ஆம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.