சத்தியமங்கலம் நகா்மன்ற கூட்டத்தில் இருந்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வெளிநடப்பு
சத்தியமங்கலம்: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை மீது நடவடிக்கை எடுக்க கோரியும், சொத்து வரி உயா்வைக் குறைக்க வலியுறுத்தியும் அதிமுக, பாஜக, பாமக நகா்மன்ற உறுப்பினா் நகராட்சிக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.
சத்தியமங்கலம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமையில் நகராட்சி கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கவுன்சிலா்கள் மூன்று போ், பாஜக கவுன்சிலா்கள் இரண்டு போ், பாமக கவுன்சிலா்கள் இரண்டு போ் என மொத்தம் 7 போ் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சொத்து வரி உயா்வைக் குறைக்க வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.
இதைத் தொடா்ந்து நகராட்சி அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு துணி கட்டியபடி கவுன்சிலா்கள் கோஷமிட்டனா்.