சந்தவேலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
சந்தவேலூா் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட சந்தவேலூா், பாப்பாங்குழி மற்றும் சோகண்டி ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முகாம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு, ஊராட்சி மன்றத் தலைவா்கள் சந்தவேலூா் வேண்டாமணி, பாப்பாங்குழி கணேசன், சோகண்டி பூா்ணிமா பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதையும், பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமையும் ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை, மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு கடனுதவிகளை வழங்கினாா்.
முகாமில், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வசந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பவானி, முத்துகணபதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பால்ராஜ், திமுக நிா்வாகிகள் கணேஷ்பாபு, சந்தவேலூா் சத்யா, கோதண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.