பூண்டி ஏரியில் உபரிநீா் திறப்பு அதிகரிப்பு: வெள்ள எச்சரிக்கை
சபரிமலை: `மாளிகபுறத்தில் மஞ்சள் தூவி, தேங்காய் உருட்ட வேண்டாம்' - கோர்ட் கருத்தை வரவேற்ற தந்திரி
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலகால பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதற்காக நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் இருமுடிகட்டி சபரிமலைக்குச் சென்று வருகின்றனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பா நதியில் நீராடுவதை புனிதமாக கருதுகின்றனர். அதே சமயம் பெரும்பாலான பக்தர்கள் தாங்கள் அணிந்து செல்லும் பழைய ஆடையை பம்பா நதியில் வீசிவிட்டுச் செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே பம்பாவில் துணிகளை வீசிச்செல்ல வேண்டாம் என தேவசம்போர்டு கேட்டுக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது சபரிமலை ஐயப்ப சுவாமி சன்னிதானத்தின் அருகில் அமைந்துள்ள மாளிகபுறம் அம்மன் சன்னதியில முதல் முதலாக மாலையிட்டு செல்லும் கன்னி ஐயப்ப பக்தர்கள் மஞ்சள் பொடி தூவுவதுடன், கோயில் சுற்றி தேங்காய் உருட்டி வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மாளிகபுறத்தில் தேங்காய் உருட்டுவது கட்டாயமான ஆச்சாரம் அல்ல என கேரளா ஐகோர்ட்டின் தேவசம் பெஞ்ச் கருத்து தெரிவித்துள்ளது. தேங்காய் உருட்டுவது ஆச்சாரத்தில் ஒரு பகுதியானது அல்ல எனவும், இது போன்ற செயல்கள் மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் ஐகோர்ட் நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், எஸ்.முரளி ஆகியோர் அடங்கிய தேவசம் பெஞ்ச் தெரிவித்துள்ளது. மேலும், இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
மாளிகபுறம் சன்னதியில் தேங்காய் உருட்டக் கூடாது என ஐகோர்ட் கூறியுள்ளது குறித்து, சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவர் கூறுகையில், "மாளிகபுறம் சன்னதியில் மஞ்சள் தூவுதல், தேங்காய் உருட்டுதல், பம்பாவில் ஆடைகளை வீசுதல் போன்றவை சபரிமலை ஆச்சாரம் அல்ல. மஞ்சள்பொடி, விபூதி ஆகியவற்றை போடுவதற்கு மாளிகபுறத்தில் தனியாக ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போது வெளியாகியுள்ள ஐகோர்ட் தீர்ப்பை நடைமுறைபடுத்த தேவசம்போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
சபரிமலை நடை திறக்கப்பட்டு 12 நாள்களில் சபரிமலையில் 63.01 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த கால அளவைவிட 15.89 கோடி ரூபாய் அதிகமாகும், அப்பம் விற்பனை மூலம் 3.53 கோடி ரூபாய், அரவணை விற்பனை மூலம் 28.93 கோடி ரூபாயும் வருவாயாக வந்துள்ளதாகவும், கூட்டம் அதிகமாக இருந்தும் சுகமான தரிசனத்துகு ஏற்பாடு செய்யப்பட்டதுதான் வருவாய் அதிகரித்ததற்கு காரணம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் அறிவித்துள்ளார். இதுவரை பத்து லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.