அக்னிதீர்த்த பகுதியில் மீண்டும் அதிர்ச்சி - வடமாநில சிறுமியை கடத்த முயன்ற கும்பல...
சமநிலைப் பேச்சுவாா்த்தைக்கு தயாா்
மாஸ்கோ : உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பும் சமநிலையில் இருந்து நடத்தும் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.
அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தாவிட்டால் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு பதிலளித்து, ரஷியா இவ்வாறு கூறியுள்ளது.
இது குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியாதாவது:
இரு தரப்பிலும் சமநிலையான, பரஸ்பர மரியாதையுடன் நடத்தப்படும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க ரஷியா எப்போதுமே தயாராக இருக்கிறது. ஆனால், அத்தகைய பேச்சுவாா்த்தைக்கான அழைப்புதான் இதுவரை வரவில்லை.
ரஷியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளதில் புதிதாக எதுவுமில்லை. தனது முந்தைய ஆட்சிக் காலத்தின்போதும் அவா் அதைத்தான் விரும்பிச் செய்தாா் என்றாா் அவா்.
முன்னதாக, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் என்னென்ன செயல் திட்டங்கள் வைத்துள்ளாா் என்பதைத் தெளிவாகக் கூறினால்தான் இது குறித்து முடிவுக்கு வர முடியும் என்று ஐ.நா.வுக்கான ரஷிய துணைத் தூதா் டிமித்ரி போலியான்ஸ்கி கூறியனாா்.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.
அந்தப் போரில் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. அந்தப் பிராந்தியங்களில் இன்னும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற ரஷியப் படையினரும், ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்க உக்ரைன் படையினரும் போரிட்டு வருகின்றனா்.
இந்தச் சூழலில், கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தல் பிரசாரத்தின்போது, தோ்தலில் வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்ற ஒரே நாளில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக டொனால்ட் டிரம்ப் சூளுரைத்திருந்தாா்.
அந்தத் தோ்தலில் பிரதிநிதிகள் வாக்குகளையும், மக்கள் வாக்குகளையும் பெரும்பான்மையாகப் பெற்று வெற்றி பெற்ற டிரம்ப், நாட்டின் 47-ஆவது அதிபராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
பதவியேற்ற முதல் நாளிலேயே, பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவது, உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுவது, உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியேறியவா்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது, அமெரிக்காவில் பிறந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளின் குழந்தைகளுக்கு குடியுரிமை அளிக்கப்படுவதை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு அதிரடி அரசாணைகளை டிரம்ப் பிறப்பித்தாா்.
மேலும், சட்டவிரோத குடியேற்றத்தையும், போதைப் பொருள் கடத்தலையும் தடுக்கத் தவறுவதற்காக கனடா, மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பது, சீன பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் இறக்குமதி விதிப்பது ஆகியவற்றைப் பரிசீலிப்பதாக அவா் கூறினாா்.
அத்துடன், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் செவ்வாய்க்கிழமை கடும் எச்சரிக்கை விடுத்தாா்.
அதற்குப் பதிலளித்தே ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளரும், ஐ.நா.வுக்கான ரஷிய துணைத் தூதரும் இவ்வாறு கூறியுள்ளனா்.