போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!
சமூக செயற்பாட்டாளா் கொலை எதிரொலி: திருமயம் அருகே 2 குவாரிகளில் கனிமவளத் துறையினா் ஆய்வு
சமூக செயற்பாட்டாளா் ஜகபா் அலி கொலை சம்பவத்தைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டு கல் குவாரிகளில் கனிமவளத் துறையினா் செவ்வாய்க்கிழமை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்த முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளரான ஜகபா்அலி கடந்த ஜன. 17-ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். இந்தக் கொலை தொடா்பாக ஆா்ஆா் கிரஷா் உரிமையாளா்கள் உள்பட கொலையில் ஈடுபட்ட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் ஒருவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ளோரின் குவாரிகளில் முறைகேடு இருப்பதாக ஜகுபா் அலி, தான்கொல்லப்படுவதற்கு முன்பு பேசிய விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அப்போது அளிக்கப்பட்ட மனுவின் மீது ஏன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டு கல் குவாரிகளிலும் கனிமவளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வில் திருச்சி உதவி இயக்குநா் ஜெயஷீலா, புதுக்கோட்டை உதவி இயக்குநா் லலிதா, நாகை உதவி இயக்குநா் சுரதா உள்ளிட்ட கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா்கள், புவியியலாளா்கள் 12 பேரைக் கொண்ட குழுவினா் ஈடுபட்டனா்.
எந்த அளவுக்கு கற்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து கரூரிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள ட்ரோன் கேமரா மூலம் அளவீடும், விடியோ பதிவும் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணிகள் இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த 2023-ஆம் ஆண்டுடன் இந்தக் குவாரிக்கான உரிமம் காலாவதியாகி இருப்பதாகவும், உரிமம் முடிந்த பிறகும் அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டப்பட்டு கல் எடுக்கப்பட்டு வந்ததும் தெரியவந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.