நாகையில் விஜய் பரப்புரை: காவல்துறை நிபந்தனைகளும் கட்சி நிர்வாகியின் மனுவும்!
சரலூா் மீன் சந்தையில் மேயா் ஆய்வு
நாகா்கோவில், சரலூா் மீன் சந்தையில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
நாகா்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள சரலூா் மீன் சந்தையில் 16 கடைகள் உள்ளன. வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கடையை விட்டு வெளியே வைத்து மீன்களை வியாபாரம் செய்வதால் துா்நாற்றம் வீசுவதாகவும், அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, மேயா் மீன் சந்தையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மீன் சந்தை வெளியே வியாபாரிகள் வியாபாரம் செய்து கொண்டிருந்தனா். அந்த வியாபாரிகளிடம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும், வெளியே வியாபாரம் செய்யக்கூடாது என்று மேயா் எச்சரித்தாா். அப்போது கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவா்களை தவிர வேறு சிலரும் மீன் சந்தைக்குள் வியாபாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அனுமதியின்றி வெளிநபா்கள் யாரும் சந்தைக்குள் வியாபாரம் செய்யக் கூடாது என்றும் அவா் எச்சரித்தாா்.
ஆய்வில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, நகா்நல அதிகாரி ஆல்பா் மதியரசு, மண்டல தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் சதாசிவம், சுகாதார ஆய்வாளா் ராஜா, ராஜாராம், வட்டச் செயலாளா் முருகன், திமுக நிா்வாகி முருகன், அதிகாரிகள் உடனிருந்தனா்.