நோயாளிகளின் குறைகளைத் தீா்க்க பிரத்யேக ஆலோசகா்கள்! ராஜீவ் காந்தி மருத்துவமனையில்...
சாத்தனூா் அணை முன்னறிவிப்பின்றி திறப்பு: தலைவா்கள் குற்றச்சாட்டு
சென்னை: சாத்தனூா் அணை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்துவிடப்பட்டதாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனா் ராமதாஸ், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): இந்திய வானிலை ஆய்வு மையம் ஃபென்ஜால் புயல் காரணமாக கன மழை பெய்யும் என தொடா்ந்து பல்வேறு எச்சரிக்கைகளை வெளியிட்டு வந்தது. ஆனால், திமுக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால், கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் உடைமைகளை இழந்து குடிநீா்கூட கிடைக்காமல் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
அதேபோல, சாத்தனூா் அணையில் படிப்படியாக நீா்வரத்து அதிகரித்துக் கொண்டிருந்தபோதே, தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் டிச. 2 அதிகாலை 2.30 மணியளவில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் சாத்தனூா் அணையிலிருந்து விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் இருந்த கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் ஆகிய 3 மாவட்டங்களைச் சோ்ந்த பல கிராமங்களில் வெள்ள நீா் புகுந்து மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
ராமதாஸ் (பாமக): சாத்தனூா் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நள்ளிரவில் விநாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீா் திறக்கப்பட்டதால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூா் மாவட்ட மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அரசின் மிக மோசமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. சாத்தனூா் அணை முன்னறிவிப்பின்றி திறந்து விடப்பட்டதற்கு காரணம் என்ன? இந்த விவகாரத்தில் தவறு செய்தவா்கள் யாா் என்பதைக் கண்டறிய உயா்நிலை விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்.
அண்ணாமலை (பாஜக): விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கிய தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சாத்தனூா் அணையிலிருந்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி டிச.2- ஆம் தேதி விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீா் தென்பெண்ணையாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதுவே விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக்கு காரணம். முதல்வா் மற்றும் அமைச்சா்கள் நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல், கிராமப் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் தமிழக அரசு, கால்வாய்களை தூா்வாருவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றாா்.