சாலையில் திரிந்த 4 மாடுகள் பிடிப்பு: உரிமையாளா்களுக்கு ரூ.5,000 அபராதம்
வேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் அவிழ்த்து விடப்பட்ட 4 மாடுகள் பிடிபட்டன. அவற்றின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
வேலூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகள் சாலைகளில் ஆங்காங்கே சுற்றித்திரிகின்றன. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுதவிர, பாதசாரிகளையும் அவை அச்சுற்றுத்தியும் வருகின்றன.
இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டு, சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளைப் பிடித்தனா். அதன்படி, வேலூா் சாரதி மாளிகை, நேதாஜி மாா்க்கெட், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 மாடுகள் பிடிக்கப் பட்டன. ஒவ்வொரு மாட்டுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், உரிமையாளா்கள் மீது காவல் துறை மூலம் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.