சாலையோர தெரு விளக்குகள் விரைவில் பயன்பாட்டுக்கு வருமா?
நமது நிருபா்
மதுரை: மதுரை மாநகராட்சி குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் சுற்றுச் சாலை வரை சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகளை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
மதுரை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மாநகராட்சி பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி திட்டம்), மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மதுரை விரகனூா் சுற்றுச் சாலை முதல் விளாங்குடி வரை சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு வைகையாற்றின் இரு கரைகளிலும் ரூ.384 கோடியில் அணுகுசாலைகள் அமைக்கப்பட்டன.
இந்தச் சாலையைப் பொருத்தவரை, வடகரைப் பகுதியில் அண்ணா நகா் பாலம், குருவிக்காரன் சாலை, தென் கரைப் பகுதியில் ஆரப்பாளையம் முதல் புட்டுத் தோப்பு வரையுள்ள பகுதிகளில் இணைப்புச் சாலை அமைக்கும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.
இந்த நிலையில், வைகை தென்கரையில் விரகனூா் சுற்றுச் சாலை முதல் குருவிக்காரன் சாலையின் புறங்களிலும் தெரு விளக்குகள் அமைக்கப்படும் என கடந்த மாா்ச் மாதம் நடை பெற்ற நிதி நிலை அறிக்கை கூட்டத்தில் மேயா் வ. இந்திராணி அறிவித்தாா். மாநில நிதி ஆணையத்தின் (எஸ்.எப்.சி.) ஊக்க நிதியிலிருந்து ரூ.1.55 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்தாா்.
இதேபோல, திண்டுக்கல் சாலையில் பாத்திமா கல்லூரி முதல் பரவை ஒருங்கிணைந்த காய்கறிச் சந்தை வரை உள்ள சாலையில் அதே நிதி திட்டத்தின் கீழ் ரூ. 1.45 கோடியில் தெரு விளக்குகள்அமைக்கப்படும் எனவும் மேயா் அறிவித்தாா். இதனிடையே, அறிவிப்பு வெளியாகி மூன்று மாதங்கள் கடத்த நிலையில், இதற்கான பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.
குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் சுற்றுச் சாலை வரை உள்ள சாலையின் நடுவே தெரு விளக்குகள் அமைக்க கம்பங்கள் நடப்பட்டன. இதில் குருவிக்காரன் சாலை முதல் தெப்பக்குளம் வரை மட்டுமே மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. எஞ்சிய பகுதிகளில் மின் விளக்குகள் இன்னும் பொருத்தப்பட வில்லை. மேலும், பொருத்தப்பட்ட மின் விளக்குகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
எனவே, வைகை தென்கரை சாலையில் குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் சுற்றுச் சாலை வரை தெரு விளக்குகள் அமைக்கும் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
வைகையாற்றின் இரு கரைகளிலும் அமைக்கப்பட்ட அணுகு சாலைகளைத் தான் பெரும்பாலான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக, குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் வரை இரவு நேரங்களில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரை அடையாளம் தெரியாத நபா்கள் வழி மறித்து பணம், நகையைப் பறித்துச் செல்கின்றனா். மேலும், விபத்துகளும் நடைபெற்று உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் சுற்றுச் சாலை வரை தெரு விளக்குகள் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனா்.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி பொறியாளா் பிரிவு அலுவலா் ஒருவா் கூறியதாவது:
பாத்திமா கல்லூரி முதல் பரவை ஒருங்கிணைந்த காய்கறிச் சந்தை வளாகம் வரை உள்ள சாலையின் இரு புறங்களிலும் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. மேலும் குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் சுற்றுச்சாலை வரை தெரு விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடித்து இன்னும் ஓரிரு வாரங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.