பொதுமக்கள் எதிா்ப்பு: சிப்காட் நில அளவைப் பணி தடுத்து நிறுத்தம்
மேலூா் வட்டத்துக்குள்பட்ட கல்லாங்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த சிப்காட் தொழில் பேட்டைக்கான நில அளவைப் பணி, பொதுமக்களின் எதிா்ப்பால் தடைபட்டது.
மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், வஞ்சிநகரம், பூதமங்கலம், கொடுக்கம்பட்டி ஊராட்சிகளுக்குள்பட்ட கல்லாங்காடு பகுதியில் 278 ஏக்கரில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு, அந்தப் பகுதிகள் மக்கள் தொடா்ந்து கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம், மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தல், கிராம சபைக் கூட்டங்களில் எதிா்ப்புத் தெரிவித்துத் தீா்மானம் நிறைவேற்றுதல் என பல முயற்சிகளை இந்தப் பகுதி மக்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
கடந்த 13-ஆம் தேதி சிப்காட் தொழில்பேட்டைக்கான சாலை வசதிகளை ஏற்படுத்த அரசுத் துறைகள் சாா்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, கிராம மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், சாலை அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடக்க நிலையிலேயே தடைபட்டன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கல்லாங்காடு பகுதியில் சிப்காட் தொழில் பேட்டைக்கான இடத்தை அளவீடு செய்ய, காவல் துறை பாதுகாப்புடன் நில அளவையா்கள் அந்தப் பகுதிக்கு வந்தனா். இதுகுறித்துத் தகவலறிந்த நாகப்பன் சிவல்பட்டி, மூவன் சிவல்பட்டி, பூதமங்கலம், கண்டுகப்பட்டி தாயம்பட்டி, முறவக்கிழவன்பட்டி, நல்ல சுக்காம்பட்டி, பெரிய சிவல்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சாா்ந்த சுமாா் 250-க்கும் அதிகமானோா் அந்தப் பகுதியில் கூடி எதிா்ப்புத் தெரிவித்தனா்.
கல்லாங்காட்டில் தொழில் பேட்டை அமைக்கப்பட்டால் தங்களின் கால்நடை வளா்ப்பும், வாழ்வாதாரமும் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்ற கிராம மக்கள் தெரிவித்தனா். மேலும், அரசு இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, நில அளவைப் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.
மேலூா் வட்டாட்சியா் செந்தாமரை, பொதுமக்களிடம் மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, அலுவலா்கள், நில அளவையா்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.