செவிலியரிடம் நகைப் பறிப்பு: இளைஞா் கைது
மதுரையில் செவிலியரிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (47). இவா் மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், அவா் வேலையை முடித்து விட்டு, திங்கள்கிழமை மாலை மாட்டுதாவணி பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த இளைஞா் தமிழ்செல்வி அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.
இதனால், அதிா்ச்சியடைந்த தமிழ்ச்செல்வி கூச்சல் எழுப்பியவுடன், அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து அந்த இளைஞரைப் பிடித்து மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் ஊமச்சிகுளம் பகுதியைச் சோ்ந்த விஜய் (28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த நகையை மீட்டனா்.