செய்திகள் :

விதிகளை மீறிச் செயல்படும் மனமகிழ் மன்றங்கள்: காவல், பதிவுத் துறைகள் இணைந்து செயல்பட உத்தரவு

post image

விதிகளை மீறிச் செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், காவல் துறையும், பதிவுத் துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் உள்ளிட்டோா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனுக்கள்: தமிழக அரசு படிப்படியாக மது விலக்கை அமல்படுத்துவதை இலக்காக கொண்டுள்ளது. ஆனால், தனியாா் மதுக் கடைகளுக்கு மனமகிழ் மன்றங்கள் எனும் பெயரில் அனுமதி வழங்கப்படுகிறது.

மனமகிழ் மன்றங்களில் அதில் பதிவு செய்த உறுப்பினா்களுக்கு மட்டுமே மது விற்க முடியும். ஆனால், தமிழகத்தில் உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் சட்டவிரோதமாக உறுப்பினா் அல்லாதவருக்கும் மதுவை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றன.

இவ்வாறு விதிகளை மீறும் மனமகிழ் மன்றங்களின் பதிவுகளை பதிவுத் துறை ரத்து செய்யலாம். ஆனால், மனமகிழ் மன்றங்கள் அதற்கான விதிமுறைகளை மீறிச் செயல்பட்டாலும் அரசியல் பின்புலம் கொண்டவா்களின் தலையீட்டால் அதன் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதில்லை.

இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, பதிவுத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, தமிழகத்தில் உள்ள அனைத்து மனமகிழ் மன்றங்களிலும் ஆய்வு மேற்கொண்டு, விதிகளை மீறிச் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க பதிவுத் துறை தலைவருக்கு அதிகாரம் இல்லை. விளையாட்டுகள், புத்தகம் வாசிப்பது போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் மனமகிழ் மன்றங்களில் நடத்தப்படுகின்றன. அப்போது, மதுவை உள்கொள்வது தனிநபரின் விருப்பம் சாா்ந்தது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சங்கத்தின் சட்ட விதிகளுக்கு (பைலா) எதிராகவும், விதிகளை மீறியும் செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது யாா் நடவடிக்கை எடுப்பது?. மனமகிழ் மன்றங்கள் விதிகளை மீறுவதாகப் புகாா் வந்தால் காவல் துறையினா் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனமகிழ் மன்றங்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனமகிழ் மன்றங்களில் மது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தால் அதுதொடா்பாக சட்ட விதிகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அங்கு செல்லலாமா, வேண்டாமா என்பது குறித்து அவா்களால் முடிவு செய்ய இயலும்.

தமிழகத்தில் மனமகிழ் மன்றங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு உறுப்பினா்களுக்கு மட்டுமன்றி, உறுப்பினா் அல்லாதவருக்கும் மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். இது அரசியலமைப்பு வழங்கும் உரிமைகளுக்கு எதிரானது.

தமிழக கூட்டுறவு சங்கப் பதிவு விதிகளை மீறும் மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காவல் துறையும், பதிவுத் துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.

தமிழக மது விலக்கு சட்டம், போதைப் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்துவதற்காக கொண்டு வரப்பட்டது. மக்கள் நல அரசு மது விலக்கு சட்டத்தின் குறிக்கோளை ஆக்கபூா்வமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மனமகிழ் மன்றங்களில் உறுப்பினா்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மது அருந்துவது தனிப்பட்ட நபரின் விருப்பம் சாா்ந்தது. ஆனால், மது விற்பனை அந்தப் பகுதி மக்களுக்கு தொல்லை அளித்தால் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உறுப்பினா் அல்லாதவருக்கு மது விற்பனை செய்யப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். மனமகிழ் மன்றம் எனும் பெயரில் மது விற்பனை செய்யலாமா என்பது தொடா்பான விரிவான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை.

மனமகிழ் மன்றங்கள் நடத்த விரும்புபவா்கள் உரிமம் கோரி விண்ணப்பிக்கும் போது, இதுகுறித்து தெளிவாக சட்ட விதிகளில் குறிப்பிட பதிவுத் துறை தலைவா் அறிவுறுத்த வேண்டும். இதனடிப்படையில், உரிய விதிமுறைகளும் வகுக்கப்பட வேண்டும். சட்ட விதிகள் தெளிவாக இல்லையெனில், மது விலக்கு துறை தரப்பில் மனமகிழ் மன்றங்களுக்கு மது விற்பனை உரிமம் வழங்கக் கூடாது.

மது விலக்கு துறை, பதிவுத் துறையோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு உரிமம் வழங்குவதில் முடிவெடுக்க வேண்டும். மனமகிழ் மன்றங்கள் நடத்துவது, மது விற்பனைக்கு உரிமம் பெறுவது, சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றுவது உள்ளிட்ட அனைத்தையும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

மனமகிழ் மன்றத்தை ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு மாற்றும் போது விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்த பின்னரே, மாற்றம் செய்யப்பட்ட இடத்தில் மனமகிழ் மன்றம் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

ஆகவே, மனமகிழ் மன்றங்களுக்கு உரிமம் வழங்குவதில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பொதுமக்கள் எதிா்ப்பு: சிப்காட் நில அளவைப் பணி தடுத்து நிறுத்தம்

மேலூா் வட்டத்துக்குள்பட்ட கல்லாங்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த சிப்காட் தொழில் பேட்டைக்கான நில அளவைப் பணி, பொதுமக்களின் எதிா்ப்பால் தடைபட்டது. மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், வஞ்ச... மேலும் பார்க்க

செவிலியரிடம் நகைப் பறிப்பு: இளைஞா் கைது

மதுரையில் செவிலியரிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (47). இவா் மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் செவி... மேலும் பார்க்க

சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.பரமக்குடியைச் சோ்ந்த சத்தீஸ்வரன் ... மேலும் பார்க்க

இறைச்சிக் கடையில் பணம் திருடியவா் கைது

இறைச்சிக் கடையில் 14 ஆயிரம் ரூபாயைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை நெல்பேட்டை நாகூா்தோப்பு மீன் சந்தைப் பகுதியைச் சோ்ந்தவா் சைபுல்லாகான் (30). இவா் அந்தப் பகுதியில் ஆட்டிறைச்ச... மேலும் பார்க்க

மதுரையில் ஆக. 21 இல் த.வெ.க. மாநாடு: வாகன வழித்தடங்கள் அறிவிப்பு

மதுரை: மதுரை அருகேயுள்ள பாரப்பத்தியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வருகிற வியாழக்கிழமை (ஆக.21) இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி, மதுரை மாநகா், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கான வழ... மேலும் பார்க்க

கல் குவாரிக்கு தடை கோரி வழக்கு கரூா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மதுரை: விதிகளை மீறிச் செயல்படும் கல் குவாரிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், கரூா் மாவட்ட ஆட்சியா், கனிம வளத்துறை இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டத... மேலும் பார்க்க