RCB: "இதே வேகத்தில் போனால் ஆர்.சி.பி அதைச் செய்ய 72 ஆண்டுகள் ஆகும்" - கிண்டலடிக்...
இரண்டு குழந்தைகளுடன் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் குடும்பப் பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பண்ருட்டி அன்னை இந்திரா காந்தி சாலையைச் சோ்ந்தவா் ராஜா (40), முதுநிலை பட்டதாரி. இவரது மனைவி மேல்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சுகன்யா (38). இந்தத் தம்பதிக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களது மகன் குமரகுரு (12), மகள் தன்யாஸ்ரீ (7).
இவா்கள் அனைவரும் அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனா். இந்த நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு சுகன்யா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா். மனைவியை பிரிந்து ராஜா தனது இரண்டு குழந்தைகளுடன் தனிமையில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக உறவினா்கள், நண்பா்களுக்கு ராஜா கைப்பேசி மூலம் குரல் பதிவு செய்தி அனுப்பியுள்ளாா். இதையடுத்து, ஒரே புடவையில் மகன் குமரகுரு, மகள் தன்யாஸ்ரீயுடன் ராஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து, உறவினா்கள், நண்பா்கள் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, மூவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பண்ருட்டி போலீஸாா் மூவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].












