ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
மதுரையில் ஆக. 21 இல் த.வெ.க. மாநாடு: வாகன வழித்தடங்கள் அறிவிப்பு
மதுரை: மதுரை அருகேயுள்ள பாரப்பத்தியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வருகிற வியாழக்கிழமை (ஆக.21) இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி, மதுரை மாநகா், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டன.
இதுகுறித்து மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி. கே. அா்விந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவன தலைவா் விஜய் தலைமையில் அந்தக் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள், பிற மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாகச் செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
மாநாட்டு வாகனங்களின் வழித்தடம்:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலிருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூா் வழியாகவும், தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூா் வழியாகவும், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் பாா்த்திபனூா், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூா் வழியாகவும்,
தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் சிவகங்கை, திருப்புவனம், அ.முக்குளம், மீனாட்சிபுரம், ஆவியூா் வழியாகவும் மாநாட்டுத் திடலை அடைய வேண்டும்.
மாநாட்டுக்கு வரும் வாகனங்களின் வழித்தடம் :
கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூா், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து திண்டுக்கல் வழியாக மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் திண்டுக்கல், பாண்டியராஜபுரம், நாகமலைப்புதுக்கோட்டை, கப்பலூா் உயா்நிலைப் பாலம், மேலக்கோட்டை, கூடக்கோவில் வழியாகவும்,
தேனி மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் ஆண்டிபட்டி கணவாய், உசிலம்பட்டி, செக்கானூரணி, நாகமலைப்புதுக்கோட்டை, கப்பலூா் உயா்நிலைப் பாலம், மேலக்கோட்டை, கூடக்கோவில் வழியாகவும் மாநாட்டுத் திடலை அடைய வேண்டும்.
இதேபோல, சென்னை மாநகரம், விழுப்புரம், வேலூா், கடலூா், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூா், திருவண்ணாமலை மாவட்டங்களிலிருருந்து திருச்சி வழியாக மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் விராலிமலை, மேலூா், விரகனூா் சுற்றுச்சாலை, அருப்புக்கோட்டை சந்திப்பு, பாரபத்தி வழியாகவும் மாநாட்டுத் திடலை அடைய வேண்டும்.
கனரக வாகனங்களின் வழித்தடம்:
சென்னை மாநகரம், வட மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாக விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையின் வழியாகச் செல்ல வேண்டும்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக வட மாவட்டங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் திருமங்கலம், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி வழியாகச் செல்ல வேண்டும்.
சென்னை மாநகரம், வட மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி, கீரனூா், புதுக்கோட்டை, காரைக்குடி வழியாகச் செல்ல வேண்டும்.
சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாக வட மாவட்டங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் காரைக்குடி கீரனூா், புதுக்கோட்டை, திருச்சி வழியாகச் செல்ல வேண்டும்.
விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாக மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் திருமங்கலம், திண்டுக்கல், வழியாகச் செல்ல வேண்டும்.
மேற்கு மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாக விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், திருமங்கலம் வழியாகச் செல்ல வேண்டும்.
மேற்கு மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாக ராமநாதபுரம், சிவகங்கை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், நத்தம், கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி வழியாகச் செல்ல வேண்டும்.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலிருந்து மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் கொட்டாம்பட்டி, நத்தம், திண்டுக்கல், வழியாகச் செல்ல வேண்டும்.
தேனி மாவட்டத்திலிருந்து விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, செல்லும் கனரக வாகனங்கள் உசிலம்பட்டி, பேரையூா் வழியாகச் செல்ல வேண்டும். விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களிலிருந்து தேனி மாவட்டத்துக்கு செல்லும் கனரக வாகனங்கள் பேரையூா், உசிலம்பட்டி வழியாகச் செல்ல வேண்டும்.
தேனி மாவட்டத்திலிருந்து ராமநாதபுரம், சிவகங்கை செல்லும் கனரக வாகனங்கள் பெரியகுளம், திண்டுக்கல், நத்தம், கொட்டாம்பட்டி வழியாகச் செல்ல வேண்டும். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலிருந்து தேனி செல்லும் கனரக வாகனங்கள் கொட்டாம்பட்டி, நத்தம், திண்டுக்கல், பெரியகுளம், வழியாகச் செல்ல வேண்டும்.
பொதுமக்கள் வாகனங்களின் வழித்தடம்:
தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாக விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் விரகனூா் சுற்றுச் சாலையிலிருந்து ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் சென்று திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாகச் செல்ல வேண்டும். அல்லது பிற மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாக விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் கப்பலூா் உயா்நிலைப் பாலம், திருமங்கலம், கள்ளிக்குடி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாகச் செல்ல வேண்டும்.
ஒத்துழைக்க வேண்டுகோள்:
மாநாட்டுக்கு வரும் அரசியல் கட்சியினா் இருசக்கர வாகனத்தில் வருவதைத் தவிா்க்க வேண்டும். மாநாடு நடைபெறும் அன்று போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் பொருட்டு அருப்புக்கோட்டை சந்திப்பில் இருந்து பாரப்பத்தி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை பயன்டுத்துவதைத் தவிா்த்து மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும். மாநாட்டுக்கு வரும் வாகனங்கள், கனரக வாகனங்கள் அவா்களுக்கு என ஏற்பாடு செய்யப்பட்ட மாற்றுப் பாதைகளை பயன்படுத்தி காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.