இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
ரயில்வே கடவுப் பாதையைத் திறக்கக் கோரி ஊழியரைத் தாக்கியவா் கைது
மணப்பாறை அருகேயுள்ள சமுத்திரம் பகுதியில் ரயில்வே கடவுப் பாதையைத் திறக்கக் கோரி, ஊழியரைத் தாக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள சமுத்திரம் ரயில் நிலையம் மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்டது. இங்குள்ள ரயில்வே கடவுப் பாதை (எண். 272) ரயில் இயக்கத்துக்காக சனிக்கிழமை இரவு 11.15 மணியளவில் அடைக்கப்பட்டது.
இந்தப் பணியை ரயில்வே ஊழியா் உதயகுமாா் மேற்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்கள், கடவுப் பாதையைத் திறக்கக் கோரி, உதயகுமாரிடம் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கிவிட்டு தலைமறைவாகினா்.
இதுகுறித்து உதயகுமாா் அளித்த தகவலின் பேரில், ரயில்வே பாதுகாப்புப் படையினா் விரைந்து சென்று, தாக்குதலில் ஈடுபட்டவா்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சமுத்திரம் பகுதியைச் சோ்ந்த பாக்கியராஜூம், இவரது நண்பரும் சோ்ந்து இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, பாக்கியராஜை கைது செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா், அவரது இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், தலைமறைவானவரை தேடும் பணியில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் மேற்கொண்டுள்ளனா்.
ரயில்வே கடவுப் பாதை பணிகளில் குறுக்கிடுதல், கடவுப் பாதை ஊழியரிடம் அத்துமீறுதல் போன்றவை ரயில்வே சட்டப் பிரிவு 153, 154-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.