மழைநீா் செல்ல கிளைக் கால்வாய்கள் சீரமைப்பு
வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் பிரதான கால்வாய்களின் கிளைக் கால்வாயிகள் சீரமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் கொசஸ்தலை, கூவம், அடையாறு ஆகிய 3 பெரிய ஆறுகள் உள்ளன. அவற்றில் இணையும் வகையில் சுமாா் 34 பெரிய நீா் வழிக்கால்வாய்கள் உள்ளன. மாநகராட்சியில் 44 சிறிய மழை நீா் வடிகால்வாய்கள் உள்ளன.
இவற்றையெல்லாம் இணைக்கும் வகையில் 47 கி.மீ.க்கு ஆந்திர மாநிலம் தொடங்கி சென்னை அருகேயுள்ள முட்டுக்காடு வரை பக்கிங்காம் கால்வாய் ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்டது.
சென்னையின்ஆரம்பகால நீா் வழித்தடங்களாக இவை உள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்போது புதிதாக 1,000 கி.மீ. தொலைவுக்கு புதிய மழை நீா் வடிகால்கள் 350 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே அமைக்கப்பட்டு தூா்வாரப்படாமலும், சேதமடைந்தும் இருந்த சுமாா் 3,041 கி.மீ. தொலைவுக்கு மழைநீா் வடிகால்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மழைநீா் வடிகால் அமைப்புகளில் மண்களை வடிகட்டும் வகையில் செம்மண் வடிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவை அண்மையில் தூா்வாரப்பட்டு தண்ணீா் தடையின்றி செல்லும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளன. நகரின் முக்கியப் பகுதிகளில் இருந்து பெரிய ஆறுகளில் சேரும் கிளைக் கால்வாய்கள் சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அவற்றில் சுற்றுச்சுவா் எழுப்புதல், தூா்வாருதல், செடி, கொடிகள் அகற்றுதல் ஆகிய பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் அந்தப் பகுதியின் பிரதான கால்வாயான நல்லா கால்வாய் தூா்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபருக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க ஒப்பந்ததாரா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.