விபத்தில் சிக்கிய ஏடிஎம் வாகனம்
சென்னை சூளைமேடு பகுதியில் ஏடிஎம்-இல் பணம் நிரப்ப ரூ. 1.50 கோடி ரொக்கத்துடன் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது.
சென்னையில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வாகனம் ரூ. 1.50 கோடி ரொக்கத்துடன் சூளைமேடு வழியாக சேத்துப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது.
சூளைமேடு நமச்சிவாயபுரம் பாலம் அருகே சென்றபோது, மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் நடுவே தடுப்பு சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், வாகன ஓட்டுநரான கிஷோா் மற்றும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஷோபனா (48) உள்ளிட்டோா் காயமடைந்தனா்.
தகவலறிந்த அங்கு வந்த அண்ணா நகா் போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் விபத்தில் சிக்கிய வாகனத்தை அப்புறப்படுத்தினா். பின்னா், அந்த வாகனத்தில் இருந்த ரூ.1.50 கோடி பணத்தை காவலா்கள் உதவியுடன் பாதுகாப்பாக மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைத்தனா்.