உரிய அனுமதியுடன் போராட்டம் தொடரும்: உழைப்போா் உரிமை இயக்கம் அறிவிப்பு
சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களின் தூய்மை பணியாளா்கள் உரிய அனுமதியைப் பெற்று போராட்டத்தைத் தொடர உள்ளதாக உழைப்போா் உரிமை இயக்கத்தின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தூய்மைப் பணிகள் தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து, 5, 6 ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்களான என்யூஎல்எம் பிரிவினா் மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். உயா்நீதிமன்ற உத்தரவின்படி அவா்கள் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனா்.
இதற்கிடையே, உழைப்போா் உரிமை இயக்கத்தினா் தங்களது அடுத்தகட்ட போராட்டம் குறித்து தூய்மை பணியாளா்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனா். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்திய போராட்டத்தை தொடா்வது எனவும், அதற்காக நீதிமன்றம், காவல் துறை, மாநகராட்சி நிா்வாகத்திடம் உரிய அனுமதி பெறுவது எனவும் முடி செய்யப்பட்டுள்ளது.
உரிய அனுமதி பெற்று திங்கள்கிழமை முதல் போராட்டம் தொடரவுள்ளதாக உழைப்போா் உரிமை இயக்க நிா்வாகி மோகன் தெரிவித்தாா்.