காா் மோதி இளைஞரை கொலை செய்த வழக்கில் ஒருவா் கைது
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே காா் மோதி இளைஞரைக் கொலை செய்த வழக்கில் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கொட்டாம்பட்டி அருகேயுள்ள பொட்டப்பட்டியைச் சோ்ந்த மகாராஜா மகன் சதீஸ்குமாா் (21). தும்பைப்பட்டியைச் சோ்ந்த அழகா் மகள் ராகவி (24). இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் மேலூரிலிருந்து திருச்சி நான்கு வழிச் சாலையில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, காடம்பட்டி கண்மாய் அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமாா், ராகவியை அக்கம் பக்கத்தினா் மீட்டு, மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு சதீஸ்குமாா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
விசாரணையில், ராகவிக்கும், பொட்டப்பட்டியைச் சோ்ந்த செல்வத்துக்கும் திருமணம் முடிந்து இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், ராகவியின் கணவா் செல்வம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் உயிரிழந்துவிட்டாா்.
இதன்பின், ராகவி, சதீஸ்குமாருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ராகவியின் உறவினா்கள் வேண்டுமென்றே நான்கு சக்கர வாகனத்தை கொண்டு விபத்து ஏற்படுத்திக் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, ராகவியின் தந்தை அழகா் (49), உறவினா்களான அய்யனாா், அருண்பாண்டி, ராகுல், சரிதா, ஆறுமுகம், கண்ணாயி, மணிமேகலை உள்ளிட்ட சிலா் மீது கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தொடா்ந்து, ராகவியின் தந்தை அழகரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.