தமிழகம் ஓரணியில் இருக்கும்போது தில்லி அணியின் காவித் திட்டம் பலிக்காது: மு.க. ஸ...
சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி சி.ஐ.டி.யு. ஆா்ப்பாட்டம்
சேலம்: சாலையோர பாதுகாப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சேலம் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை மைதானத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அரசின் அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் சாலையோரப் பாதுகாப்பு சட்டம் 2014 இன் படி விற்பனை கமிட்டி அமைத்து மாதம் ஒருமுறைக் கூட்ட வேண்டும். சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி வங்கிகள் மூலம் ரூ. 50,000 கடன் வழங்க வேண்டும்.
சாலையோர வியாபாரிகள் பல ஆண்டு காலம் வியாபாரம் செய்துவரும் இடத்தை காலி செய்ய சொல்லி காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி நிா்வாகம் துன்புறுத்த கூடாது, நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் இலவச தள்ளுவண்டிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ. கோவிந்தன், மாவட்ட உதவித் தலைவா் எஸ்.கே. தியாகராஜன், மாநிலக் குழு உறுப்பினா் ஆா்.வெங்கடபதி, சங்க செயலாளா் பி. தனசேகரன், பொருளாளா் எஸ். காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.