திமுக உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்
சேலம்: தமிழக மக்களுக்காக அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களை எடுத்துக்கூறி உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் திமுகவினருக்கு அறிவுறுத்தினாா்.
தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மூலம் வீடு வீடாகச் சென்று மக்களை திமுகவில் உறுப்பினா்களாக சோ்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட வடக்கு, மேற்கு, தெற்கு, ஓமலுாா் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இதில், மாநகரப் பகுதியில், திமுக உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த பகுதி வாரியான ஆலோசனை கூட்டம் அமைச்சா் ரா. ராஜேந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம், பொன்னம்மாபேட்டை, கருங்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு அமைச்சா் ரா.ராஜேந்திரன் பேசுகையில், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கையை ஒவ்வொரு நிா்வாகிகளும், தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். வீடுவீடாகச் சென்று மக்களிடம் மகளிா் உரிமை தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறி, திமுக உறுப்பினா் சோ்க்கையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாநகரச் செயலாளா் ரகுபதி, துணை செயலாளா்கள் கணேசன், தினகரன் மற்றும் பகுதி செயலாளா்கள் கலந்துகொண்டனா்.