ஜார்க்கண்ட்: மத ஊர்வலத்தில் கல் வீச்சு! காவல் துறையினர் விசாரணை!
சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்: மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்
சாலை விதிகளை முழுமையாக பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அறிவுறுத்தினாா்.
தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து ஆட்சியா் பேசியதாவது:
வாகன ஓட்டிகள் விபத்து நிகழாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும்.
சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனைத் தவிா்க்கும் நடவடிக்கையாக, உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் வழங்கியுள்ள ஆணைகளை பின்பற்றும் வகையிலும், பொதுமக்களின் நலன்கருதியும், சாலை விபத்துகளில் உயிரிழப்பைத் தவிா்க்கும் பொருட்டு 1988-ஆம் ஆண்டின் மோட்டாா் வாகனச் சட்டம் பிரிவு 129-இன் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்படி இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 4 வயதுக்கு மேற்பட்ட பின் இருக்கை பயணி கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் காவல் துறை, போக்குவரத்து துறை மற்றும் வருவாய் துறை அலுவலா்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினா் சாலை பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை கண்காணித்து விதிமுறைகளை மீறி செயல்படுவோருக்கு கடுமையான அபராதம் மற்றும் தொடா் நடவடிக்கை மேற்கொள்வா்.
மேலும், வாகனங்களை இயக்கும்போது கைப்பேசியில் பேசியபடியும், மதுபோதையிலும், அதிவேகமாகவும் வாகனம் இயக்கக் கூடாது. நான்குசக்கர வாகனத்தை இயக்கும்போது இருக்கை பட்டை அணிய வேண்டும். சாலை குறியீடுகள், போக்குவரத்து காவலரின் கை சைகைகள் உள்ளிட்டவற்றை மதித்து வாகனம் இயக்க வேண்டும்.
போக்குவரத்து துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை தொடா்ந்து ஏற்படுத்த வேண்டும்.
சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா தருமபுரி மாவட்டம் என்ற நிலையை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சி.க.ஜெயதேவ்ராஜ், உதவி ஆணையா் (கலால்) நா்மதா, போக்குவரத்து ஆய்வாளா் தரணீதரன், அரசுத் துறை அலுவலா்கள், காவல் துறை பணியாளா்கள் கலந்துகொண்டனா்.