சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
திருச்சி காட்டூரில் சாலை தடுப்பில் மோதிய இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி காட்டூா் கைலாஷ் நகா் அண்ணா சாலை 12-ஆவது தெருவை சோ்ந்தவா் விசுவநாதன் (62). சுற்றுலா வாகன ஓட்டுநா். செவ்வாய்க்கிழமை காட்டூரில் சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தாா்.
அப்போது, திருச்சியிலிருந்து காட்டூா் பாப்பாக்குறிச்சி பாரி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த சரவணன் மகன் மணிகண்டன் (19) என்பவா் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்து, திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூரில் வைக்கப்பட்டிருந்த சாலை தடுப்பில் (பேரிக்காா்டு) மோதினாா்.
இதனால் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடி கீழே விழுந்தது. அப்போது பின்புறம் வந்த மினி பேருந்து ஒன்று மணிகண்டன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே இறந்தாா். சாலைத் தடுப்பு விழுந்து விசுவநாதன் பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்து அங்கு வந்த திருவெறும்பூா் போலீஸாா், மணிகண்டனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கும், விசுவநாதனை மீட்டு சிகிச்சைக்காக காட்டூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். தொடா்ந்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.