Shadow Fleet: புதினின் ரகசிய கடல் நகர்வுகள்; ரஷ்யாவின் 'நிழற் கடற்படை' என்பது என...
சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!
மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப் பாதையில் நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், அவருடன் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.
மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவரது மனைவி திவ்யபிரியா (28), பல் மருத்துவரான இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர்.
கார்த்திக் ராஜா, திவ்யபிரியா, உறவினர்கள் பரமேஸ்வரி (44), வளர்மதி (48) ஆகியோர் நீலகிரி மாவட்டம், உதகைக்கு காரில் கடந்த 20-ஆம் தேதி சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு தங்கி பல்வேறு இடங்களைக் கண்டுகளித்துவிட்டு உதகையில் இருந்து கார் மூலம் வியாழக்கிழமை மாலை மதுரை திரும்பினர். காரை மதுரையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஓட்டியுள்ளார்.
மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப் பாதையில் கல்லாறு அருகே 1-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது, கார் திடீரென பிரேக் பிடிக்காமல் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி நின்றது.
இதில், படுகாயமடைந்த திவ்யபிரியா, பரமேஸ்வரி, வளர்மதி ஆகியோரை அப்பகுதி மக்கள் உதவியுடன் கார்த்திக் ராஜா, ஓட்டுநர் பார்த்திபன் ஆகியோர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு திவ்யபிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பரமேஸ்வரி, வளர்மதி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இச்சம்பவம் குறித்து மேட்டுப் பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.