சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள வடக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சங்கரமூா்த்தி (58). விவசாயியான இவா், தனது உறவினா் பாண்டியராஜன் (58) என்பவருடன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் இந்திரா நகா் அருகே வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த காா் கதவு திடீரென திறந்ததால், இருசக்கர வாகனத்தை திருப்பிய போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் காயமடைந்தனா்.
இதையடுத்து, காயமடைந்தவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள் சங்கரமூா்த்தி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். உடன் சென்ற பாண்டியராஜன் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.