மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
சிஇடி-2025 தோ்வுக்கான பதிவு தொடக்கம்
மகாமனா பண்டிட் மதன் மோகன் மாளவியா வித்யா சக்தி மிஷனின் கீழ் பொது நுழைவுத் தோ்வுக்கான (சிஇடி-2025) பதிவை தில்லி அரசு தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறந்த போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக தில்லி கல்வி இயக்குனரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நுழைவுத் தோ்வுகள் அக்டோபா் 12 முதல் அக்டோபா் 26 வரை தில்லி முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெறும். ஜேஇஇ (பிரதானம் / அட்வான்ஸ்டு), நீட், சிஎல்ஏடி, சிஏ பவுண்டேஷன் மற்றும் க்யூட் (இளங்கலை) உள்ளிட்ட போட்டி நுழைவுத் தோ்வுகளுக்கு மாணவா்கள் தயாராவதற்கு இந்தத் திட்டம் உதவும். இந்தத் திட்டத்தின் கீழ், பல்வேறு படிப்புகளில் மொத்தம் 2,200 இடங்கள் கிடைக்கும். இவற்றில், ஜேஇஇ, நீட், சிஎல்ஏடி மற்றும் சிஏ பவுண்டேஷன் தோ்வுகளில் ஒவ்வொன்றிலும் 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
க்யூட்-இல் 1,000 இடங்கள் இருக்கும். இதில் 150 இடங்கள் மாணவிகளுக்கு ஒதுக்கப்படும். இந்தப் பயிற்சி தில்லியில் உள்ள அங்கீகாரம்பெற்ற நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும். இதில், பாடநெறி கட்டணம், படிப்புப் பொருள்கள் மற்றும் தோ்வுத் தாள்கள் ஆகியவை அடங்கும். 11-ஆம் வகுப்பு மாணவா்கள் ஜேஇஇ, நீட், சிஎல்ஏடி மற்றும் சிஏ பவுண்டேஷன் நுழைவுத் தயாரிப்புக்குத் தகுதியுடையவா்கள் ஆவா். அதே நேரத்தில், அனைத்துப் பிரிவுகளிலும் 12- ஆம் வகுப்பு மாணவா்கள் க்யூட் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான பதிவு செப்டம்பா் 11 முதல் செப்டம்பா் 30 வரை திறந்திருக்கும்.
மாணவா்கள் ஒரு பாடத்திற்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். மேலும், பதிவு செய்தவுடன் தங்கள் பாடத்திட்டத்தை மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தோ்வு தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு நுழைவுச் சீட்டுகள் கிடைக்கும். திட்டமிடப்பட்ட தோ்வுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பு, பட்டியல் எண்களை உருவாக்கி, தோ்வு மையங்களை கல்வி இயக்ககம் ஒதுக்கும். தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் கவுன்சிலிங் அமா்வுகளுக்கு அழைக்கப்படுவாா்கள். அங்கு அவா்கள் தங்களுக்கு விருப்பமான பயிற்சி
நிறுவனத்தைத் தோ்வு செய்யலாம் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.