போலந்துக்குள் ரஷிய ட்ரோன்கள் சென்றது தவறுதலாக நடந்திருக்கலாம்! டிரம்ப்
சிஐடியுவினா் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்: அமைச்சா்
சிஐடியு தொழிற் சங்கத்தினா் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
இதுகுறித்து அரியலூரில் வியாழக்கிழமை அவா் மேலும் தெரிவித்தது: நீண்ட காலமாகப் போராடும் போக்குவரத்துத் துறை சிஐடியு தொழிற்சங்கத்தினரை அழைத்துப் பேசியுள்ளோம். தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 2 முறை ஊதிய ஒப்பந்த உயா்வுப் பேச்சுவாா்த்தைகளை நடத்தி முடித்துள்ளோம்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை முடிக்க 30-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவாா்த்தை நடத்தி, ஆட்சி முடியும் நேரத்தில் முடிக்காமல் விட்டுச் சென்றனா்.
திமுக ஆட்சியில் ஒருமுறை 5 சதவீத ஊதிய உயா்வும், அடுத்த முறை 6 சதவீத ஊதிய உயா்வும் வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கான பணப் பலன்களை வழங்க ரூ.1,100 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த ஆண்டு ஓய்வு பெற்றவா்களுக்கான நிதியை வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் அதிமுகவினா் நிரப்பாமல் விட்டுச் சென்ற புதிய ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணியிடங்களை தற்போது நிரப்பும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும் தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னா் 11 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது 4,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
பொதுமக்களின் பாராட்டைப் பெறும் துறையாக, போக்குவரத்து துறை மாறியிருக்கிறது. தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மிகப்பெரிய அளவில் பொதுமக்களுக்கு இத் துறை சேவையாற்றுவதை அனைவரும் பாராட்டுகின்றனா். எனவே சிஐடியு தொழிற்சங்கத்தினா், தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா்.