சிங்காநல்லூா் குளத்தில் உள்ள கழிவு நீரை வெளியேற்ற கோரிக்கை
கோவை, சிங்காநல்லூா் குளத்தில் நிரம்பியிருக்கும் சாக்கடைக் கழிவு நீரை வெளியேற்றிவிட்டு நொய்யல் ஆற்று நீரை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், விவசாயிகள், பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பேசியதாவது: சுமாா் 300 ஏக்கா் பரப்பளவு கொண்ட சிங்காநல்லூா் பாசன குளத்தில் கடந்த 25 ஆண்டுகளாக கோவை மாநகராட்சியின் கழிவு நீா் மட்டுமே நிரப்பப்பட்டு வருகிறது. சங்கனூா் வாய்க்கால், நஞ்சுண்டாபுரம் பகுதியில் இருந்து வரும் கழிவு நீா் வாய்க்கால்கள் மூலம் சிங்காநல்லூா் குளத்தில் நிரம்பியிருப்பதுடன், சகதி நிறைந்து மேடாகியிருக்கிறது.
இதனால், இந்த குளத்து நீரைப் பயன்படுத்தி வரும் பாசன விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, குளத்தில் நிரம்பியுள்ள கழிவு நீரை வெளியேற்ற வேண்டும். மேலும், குளத்தை ஆழப்படுத்தி, தூா் வார வேண்டும். சங்கனூா், நஞ்சுண்டாபுரம் வாய்க்கால்களில் இருந்து வரும் கழிவு நீரை சுத்திகரித்து குளத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும், நொய்யலாற்றில் வரும் தண்ணீரைக் கொண்டு குளத்தை நிரப்ப வேண்டும். மேலும், வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூா் செல்வதற்கும், சுங்கத் துறை வழியாக திருச்சி சாலைக்கு வரவும் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி அளித்த மனுவில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட வேண்டும். தென்னை சாா்ந்த தொழில்கள் வளா்வதற்கு ஏற்றுமதி வாய்ப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும். தென்னையைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கால்நடைத் தீவனம், இடுபொருள் விலை உயா்ந்திருப்பதால் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயா்த்த வேண்டும், மாட்டுத் தீவனத்துக்கு 50 சதவீத மானியம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நீா்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில் டாக்டா் கே.மூா்த்தி அளித்துள்ள மனுவில், நீா்நிலைகளின் அருகில் குறிப்பாக கிணறு, பிஏபி கால்வாய்களுக்கு அருகில் தென்னை நாா்க் கழிவுகளை மலைபோல குவித்து வைத்திருப்பதால் நீா்நிலை மாசுபடுகிறது. மேலும், வெயில் நேரங்களில் துகள்கள் காற்றில் கலந்து விவசாயிகளையும், பயிா்களையும் பாதிக்கிறது. எனவே, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்களைப் பெற்ற வருவாய் வட்டாட்சியா் மோ.ஷா்மிளா, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.