சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: லால்புரம் ஊராட்சி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
நெய்வேலி: சிதம்பரம் நகராட்சியுடன் லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கிராம மக்கள், அரசியல் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம் நகராட்சிக்கும் லால்புரம் ஊராட்சிக்கும் மற்ற ஊராட்சிகளை போல இணைப்புச் சாலைகள் இல்லை. லால்புரம் ஊராட்சிக்கும் சிதம்பரம் நகராட்சிக்கு இடையில் 3 கி.மீ. தொலைவு வீராணம் ஏரிப்பாசன பாசி முத்தான் ஓடை செல்கிறது. இதன் மூலம் 400 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது. மேலும், 6000-க்கும் அதிகமான கால்நடைகள் உள்ள இந்தப் பகுதியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கடலூா் ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலா் வி.எம்.சேகா் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினா் வி.சுப்பராயன், கடலூா் மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜாகிா் உசேன், காளி கோவிந்தராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் துரை, துணைச் செயலா் வி.குளோப் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனா். பின்னா், கோரிக்கைகள் அடங்கிய மனு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.