உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு ஏப்.21-இல் மகாருத்ர மகாபிஷேகம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத மகாபிஷேகம் வருகிற 21-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. மேலும், மகாருத்ர யாகமும் நடைபெறவுள்ளது.
ஸ்ரீநடராஜா் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மாா்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறும். ஆனித்திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.
சித்திரை மாத மகாபிஷேகம் சித்சபை முன் உள்ள கனகசபையில் வருகிற 21-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிா், இளநீா், பன்னீா் பஞ்சாமிா்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது.
முன்னதாக, ஏப்.17-ஆம் தேதி தட்சிணாமூா்த்தி சந்நிதியில் கூஷ்மாண்ட ஹோமமும், ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் ஆனந்த நடராஜமூா்த்தி சந்நிதியில் நாந்தி மற்றும் அனுக்ஞை பூஜையும் நடைபெறும். ஏப்.18-ஆம் தேதி முக்குறுணி விநாயகா் சந்நிதியில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனையும், 19-ஆம் தேதி நவக்கிரக சந்நிதியில் நவக்கிரக ஹோமம், அபிஷேகமும் நடைபெறும். ஏப்.20-ஆம் தேதி காலை தேவசபை முன் அங்குரம், ரக்ஷாபந்தனம், ஆச்சாரியா் வா்ணம், தன பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெறும்.
ஏப்.21-ஆம் தேதி காலை திருவோண நட்சத்திரத்தில் சிவகாமசுந்தரி சமே நடராஜப்பெருமானுக்கு ஏககால லட்சாா்ச்சனையும், அதன் பிறகு யாகசாலையில் கடஸ்தாபனம், மகாருத்ர ஜப பாராயணம் தொடங்கி நடைபெறும். மதியம் மகாருத்ர ஹோமம், வஸோதாரா ஹோமம், மகாருத்ர பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெறும்.
பின்னா், மாலையில் வடுகபூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, மஹா பூா்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனையும், பின்னா் மாலை 6 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று கனகசபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மஹா ருத்ர ஜப மகாபிஷேகம் நடைபெறும்.
மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் செயலா் டி.சிவசுந்தர தீட்சிதா், கட்டளை தீட்சிதா் எஸ்.ஆா்.பட்டுராஜ தீட்சிதா் மற்றும் பொதுதீட்சிதா்கள் செய்துள்ளனா்.