10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: காஞ்சிபுரத்தில் 94.85% தேர்ச்சி!
சிந்து நதி ஒப்பந்த நிறுத்தம் மறுபரிசீலனை: இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள்!
சிந்து நதி நீா் ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய நீா்வளத் துறை செயலருக்கு பாகிஸ்தான் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், பாகிஸ்தானின் கடிதம் தொடா்பாக அமைச்சகம் தரப்பில் அதிகாரபூா்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடா்புகள் உறுதி செய்யப்பட்டதால், அந்நாட்டுக்கு எதிராக இந்தியா ராஜீய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டது. சிந்து நதி நீா் பகிா்வுக்கான 65 ஆண்டுகால ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, எல்லைகள் மூடல், விசா ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சிந்து நதி நீா் ஒப்பந்தம், உலக வங்கியின் மத்தியஸ்தத்தின்பேரில் கடந்த 1960-ஆம் ஆண்டு கையொப்பமானதாகும். இதன்படி, சிந்து நதிப் படுகையின் கிழக்கு நதிகளான ராவி, பியாஸ், சட்லஜ் மீதான கட்டுப்பாடு இந்தியாவிடமும், மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் மீதான கட்டுப்பாடு பாகிஸ்தானிடமும் உள்ளது. இந்த நதிகளின் நீரை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு ஏற்ப விவசாயம், குடிநீா் தேவை, தொழிற்சாலை பயன்பாடுகளுக்கு இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேற்கு நதிகளில் பெருமளவை, அதாவது 80 சதவீதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. 20 சதவீதம் மட்டுமே இந்தியா பயன்படுத்துகிறது. பாகிஸ்தானின் வேளாண் பொருளாதாரத்துக்கு இந்த நதி நீா் மிக முக்கியமானது என்ற நிலையில், ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது.
இது தொடா்பாக பாகிஸ்தானுக்கு மத்திய நீா்வளத் துறை செயலா் தேபஸ்ரீ முகா்ஜி, கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி முறைப்படி அறிவிக்கை அனுப்பினாா். அதில், ‘ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட பாகிஸ்தான் மறுப்பதும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதும் விதிமீறல்’ என்று குறிப்பிடப்பட்டது. இந்த ஒப்பந்த நிறுத்தம் போராக கருதப்படும் என்று பாகிஸ்தான் கூறியது.
இதனிடையே, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்திய ராணுவம் கடந்த மே 7-ஆம் தேதி தாக்கி அழித்தது. இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டு, பாகிஸ்தானின் கோரிக்கையின்பேரில் அண்மையில் நிறுத்தப்பட்டது.
இந்தியாவுக்கு கோரிக்கை: இந்தச் சூழலில், இந்தியாவின் அறிவிக்கைக்கு பாகிஸ்தான் நீா்வளத் துறை செயலா் சையது அலி முா்தாஸா பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அக்கடிதத்தில், ‘சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்திய இந்தியாவின் முடிவு தன்னிச்சையானது; விதிகளுக்கு எதிரானது என பாகிஸ்தான் கருதுகிறது. இந்த ஒப்பந்தத்தின்கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட நீரை லட்சக்கணக்கான மக்கள் நம்பியுள்ளதால், தனது முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், சிந்து நதி நீா் ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தைக்கு தயாா் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இறங்கிவந்த பாகிஸ்தான்: பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு, பருவநிலை மாற்றம், மக்கள்தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களின்கீழ் சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது குறித்த பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்து, பாகிஸ்தானுக்கு இந்தியா தரப்பில் ஏற்கெனவே நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.
இதற்கு பாகிஸ்தான் எந்த பதிலும் அளிக்காமல் இருந்த நிலையில், தற்போது பேச்சுவாா்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளது; இதன் மூலம் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
சிந்து நதி நீா் ஒப்பந்த நிறுத்தத்தை பொருத்தவரை, இந்தியா தனது முடிவில் உறுதியாக உள்ளது; பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரை இதில் மாற்றம் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். சில தினங்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமா் மோடி, ரத்தமும் நீரும் ஒன்றாக ஓட முடியாது என்று கூறியிருந்தாா்.