சின்னமனூரில் சாலை விரிவாக்கப் பணி: நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வு
சின்னமனூரில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.4.40 கோடியில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருவதை நெடுஞ்சாலைத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
சின்னமனூரிலிருந்து சுக்காங்கல்பட்டி, சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம் வரை மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையில் சீப்பாலக்கோட்டை-காமாட்சிபுரம் இடையே குறுகலான சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள், வாகன ஓட்டுநா்கள் அவதி அடைந்தனா்.
இதையடுத்து, இந்தச் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், சீப்பாலக்கோட்டை-காமாட்சிபுரம் இடையேயான சாலை ரூ.4.40 கோடியில் விரிவாக்கப் பணிகள் தொடங்கின.
இந்த சாலையை தேனி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சுவாமிநாதன், உத்தமபாளையம் உதவிக் கோட்டப் பொறியாளா் ராஜா, உதவிப் பொறியாளா் வைரக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.