சிமென்ட் மூட்டைகள் திருடியவா் கைது
சிவகங்கையில் சனிக்கிழமை சிமென்ட் மூட்டைகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை வடக்கு ராஜ வீதியில் மாரியப்பன் ( 67) சிமென்ட் கடை நடத்தி வருகிறாா். இவருக்குச் சொந்தமான சிமென்ட் கிடங்கு உழவா் சந்தை அருகே உள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகல் மாரியப்பன் சிமென்ட் மூட்டைகளை ஏற்றுவதற்காக கிடங்குக்கு சென்றாா்.
அப்போது, அங்கு அவரிடம் ஏற்கெனவே வேலை பாா்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊழியா் குமாா் (52) 20 சிமென்ட் மூடைகளை தனக்கு சொந்தமான மினி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மாரியப்பன், மினி லாரியுடன் குமாரைப் பிடித்து சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதுகுறித்து உதவி ஆய்வாளா் தனசேகரன் வழக்குப் பதிந்து குமாரைக் கைது செய்தாா்.