மகாராஷ்டிரத்தில் டிசம்பரில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்: மாநில அரசு
சிரியா: இருதரப்பு மோதலில் 100 பேர் பலி! தலையிடும் அரசுப் படைகள்!
சிரியாவின் ஸ்வீடா மாகாணத்தில் ட்ரூஸ் இன மக்களுக்கும், பெடோயின் பழங்குடியினருக்கும் இடையிலான மோதல்களைக் கட்டுப்படுத்த, அந்நாட்டின் இடைக்கால அரசின் படைகள் தலையிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிரியா நாட்டில் சிறும்பான்மையினரான ட்ரூஸ் மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய ஸ்வீடா மாகாணத்தில், கடந்த 2 நாள்களாக மோதல்கள் நடைபெற்று வருகின்றன. ட்ரூஸ் மற்றும் பெடோயின் இன மக்களுக்கு இடையிலான இந்த மோதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அம்மாகாணத்தில் ஊரடங்கு பிறப்பித்து மோதல்களை முடிவுக்கொண்டு வருவதற்கு, சிரியாவின் இடைக்கால அரசின் படைகள், இன்று (ஜூலை 15) ஸ்வீடாவினுள் நுழைய, ட்ரூஸ் இனத்தின் மதகுருக்கள் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சிரியாவின் உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளின் படைகள் ஸ்வீடா நகரத்தினுள் நுழைவார்கள், என அம்மாகாணத்தின் பாதுகாப்புத் துறை தலைவர் ஜெனரல் அஹ்மது தலாட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த மோதல்களில் தலையிடும் அரசுப்படைகள், இருதரப்பையும் பிரித்து வைக்க முயற்சிக்கும் எனக் கூறப்பட்டன. ஆனால், அவர்கள் ஸ்வீடாவில் ட்ரூஸ் மக்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளைக் கைப்பற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, வெளியான செய்திகளில் சிரியா ராணுவம் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் படைகளுடன், அந்நகரத்தினுள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்துடன், ட்ரூஸ் இன மக்களின் பாதுகாவலராக தன்னை அடையாளப்படுத்தும் இஸ்ரேல், நேற்று (ஜூலை 14) சிரியாவினுள் நுழைந்து அந்நாட்டின் அரசுப்படைகளின் மீது தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
கடந்த ஜூலை 13 ஆம் தேதி, பெடோயின் ஆயுதப்படையினர், ட்ரூஸ் குழுவைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையில் பதில் கடத்தல்கள் நிகழ்ந்து அவை மோதல்களாக உருவாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2024 டிசம்பரில் பஷார் அல் - அஸாத் ஆட்சியைக் கவிழ்த்து அதிபர் அஹமத் அல்-ஷரா தலைமையில் அமைந்த இடைக்கால அரசு, பாதுகாப்பு உள்ளிட்ட ஏராளமான துறைகளில் கடுமையான சவால்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அமெரிக்க காப்பகத்தில் தீ: 9 போ் உயிரிழப்பு