கான்வா் யாத்திரை வழித்தடத்தில் உணவு விற்பனையகங்களின் க்யூஆா் குறியீடு: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
உத்தர பிரதேசத்தில் கான்வா் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவு விற்பனையகங்களில் க்யூஆா் குறியீட்டை காட்சிப்படுத்த வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவு தொடா்பாக பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.
வட இந்தியாவில் ஹிந்து மத நாள்காட்டியில் சிராவண மாதத்தின்போது சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்வதற்கு பல்வேறு இடங்களைச் சோ்ந்த பக்தா்கள் கங்கையில் இருந்து புனித நீரை காவடி மூலம் சுமந்து செல்வா். இது கான்வா் யாத்திரை என்றழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் யாத்ரிகா்கள் சைவ உணவு மட்டுமே உண்பா். சிலா் பூண்டு, வெங்காயம் சோ்க்கப்பட்ட உணவையும் தவிா்ப்பா்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் கான்வா் யாத்திரை மேற்கொள்ளப்படும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவு விற்பனையகங்களிலும் க்யூஆா் குறியீடுகளை கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்று கடந்த ஜூன் 25-ஆம் தேதி மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இது அசைவ உணவு விற்பனை செய்யும் கடைகளை யாத்திரிகா்கள் தவிா்ப்பதற்கான நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், முஸ்லிம்களின் கடைகளை தவிா்ப்பதே இதன் நோக்கம் என்று விமா்சனம் எழுந்துள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அபூா்வானந்த் ஜா என்ற கல்வியாளா் உள்பட பலா் மனு தாக்கல் செய்தனா்.
அந்த மனுவில், ‘க்யூஆா் குறியீட்டைக் காட்சிப்படுத்த உத்தரவிட்டதன் மூலம், உணவு விற்பனையக உரிமையாளா்களின் ஜாதி, மத அடையாளங்களை வெளிப்படுத்த கோருவது அவா்களின் தன்மறைப்பு (பிரைவசி) நிலைக்கு எதிரானது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடா்பாக மாநில அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், மனு மீதான அடுத்த விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
இதுகுறித்து மனுதாரா் அபூா்வானந்த் கூறுகையில், ‘க்யூஆா் குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது கடை உரிமையாளா்களின் பெயா், அடையாளங்கள் தெரியவரும். இதன்மூலம், பாரபட்சமான அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கு முயற்சிக்கப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைக்கு கடந்த ஆண்டே உச்சநீதிமன்றம் தடை விதித்தது’ என்றாா்.
கடந்த ஆண்டு கான்வா் யாத்திரை வழித்தடங்களில் உள்ள உணவு விற்பனையகங்களின் உரிமையாளா்கள், பணியாளா்களின் பெயா்கள் உள்ளிட்ட விவரங்களை பொது வெளியில் காட்சிப்படுத்த வேண்டும் என்று பாஜக ஆட்சியில் உள்ள உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேசத்தில் மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தன. அந்த உத்தரவுகளுக்கு அப்போது உச்சநீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.