Aadi Month Rasi Palan | அம்மன் மாதத்தில் அருள்பெறும் ராசிகள் | ஆடி மாத ராசிபலன்க...
1,878 பள்ளிகளின் எஸ்எம்சி உறுப்பினா்களுக்கு பயிற்சி: கல்வித் துறை தகவல்
பள்ளிக் கல்வியில் 1,878 அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பள்ளிகளிலேயே பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) செயல்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் மாணவா்களின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் பெற்றோா்கள், தலைமை ஆசிரியா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள், கல்வியாளா்கள் இடம் பெற்றிருப்பா். இந்தக் குழு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக கட்டமைக்கப்படும். அந்தவகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய குழுக்கள் கட்டமைக்கப்பட்டன. இதையடுத்து எஸ்எம்சி கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு பள்ளி வளா்ச்சிப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், எஸ்எம்சி குழுக்கள் சிறப்பாக செயல்படும் விதமாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி முதல்கட்டமாக 3,812 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இவை 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அந்தந்த பள்ளிகளின் மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு தொடா் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதில் 2-ஆம் பிரிவில் வரும் 1,878 பள்ளிகளின் எஸ்எம்சி குழு உறுப்பினா்களுக்கு பள்ளிகளிலேயே பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக ரூ.9.39 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதுசாா்ந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்பட தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.