Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கீழ்வேளூா் தாலுகாவைச் சோ்ந்தவா் மாதவன் (32). இவா், 8 வயது சிறுமியை இனிப்பு வாங்கித் தருவதாகக் கூறி, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும், இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட சிறுமி, மாதவன் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் கடந்த 2021 ஜூன் 28-ஆம் தேதி, நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் மாதவனை கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காா்த்திகா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
அதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றத்துக்காக மாதவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து, ஏக காலத்தில் அனுபவிக்கும்படி உத்தரவிட்டுள்ளாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதையடுத்து மாதவன் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.