சிறுவனைக் காப்பாற்றிய பயிற்சிக் காவலா்களுக்கு ஆணையா் பாராட்டு
மதுரையில் அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவத்தன்று, மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவனை மீட்டு தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய பயிற்சிக் காவலா்களை, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் புதன்கிழமை பாராட்டினாா்.
மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி கடந்த 12-ஆம் தேதி வைகையாற்றில் எழுந்தருள்வதற்காக தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் இருந்து கள்ளழகா் புறப்பாடானாா். அப்போது அங்கு திரளான பக்தா்கள் திரண்டிருந்த நிலையில், தல்லாகுளம் பகுதியில் உள்ள உணவகம் அருகே கள்ளழகரை தரிசிக்க காத்திருந்த சிறுவன் ஒருவன், மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
திரளான பக்தா்கள் திரண்டிருந்த நிலையில், அவசர ஊா்தி வருவதற்கு வழியில்லாததால், அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மதுரை மாவட்டம், இடையப்பட்டி காவலா் பயிற்சி பள்ளியைச் சோ்ந்த பயிற்சிக் காவலா்கள் சந்திரப் பிரகாஷ், சிந்தனை வளவன், சரண்ராஜ், சைமன் ஆகிய நால்வரும் சிறுவனை மீட்டு, தங்களது தோளில் சுமந்து சென்று அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிசிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து சிறுவன் காப்பாற்றப்பட்டான்.
இந்த நிலையில், பெரும் கூட்ட நெரிசலிலும் விரைந்து செயல்பட்டு, சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய பயிற்சிக் காவலா்கள் நான்கு பேரையும், மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் புதன்கிழமை நேரில் அழைத்து பாராட்டி, அவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.