உத்தரகண்ட்: மதரஸா கல்வியில் ’ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடம் சேர்ப்பு!
சிறுவனை அடைத்து வைத்து சித்ரவதை: இருவா் கைது
தேனியில் கைப்பேசியை திருடியதாக சிறுவனை இறைச்சிக் கடையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி, சிவராம் நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் பாலவிஜயன் (13). இவரை தேனி, சமதா்மபுரத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் விக்னேஷ்(33) என்பவா், தனது கைப்பேசியை திருடியதாகக் கூறி சமதா்மபுரத்தில் உள்ள தனது சகோதரா் ஜெகதீஷ் என்பவரின் இறைச்சிக் கடைக்கு அழைத்துச் சென்று விசாரித்தாா். அங்கு விக்னேஷ், ஜெகதீஷ், இவா்களது நண்பா் தேனி அல்லிநகரம், முத்துபாலி தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் ஹரிபிரசாத் (21) ஆகியோா், பாலவிஜயனை ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் கடையில் அடைத்து வைத்து அடித்தும், மிரட்டியும் சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.
பிறகு, திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்த பாலவிஜயன் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினாராம். இதுகுறித்து பாலவிஜயனின் தாயாா் தேனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விக்னேஷ், ஜெகதீஷ், ஹரிபிரசாத் ஆகிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விக்னேஷ், ஹரிபிரசாத் ஆகியோரை கைது செய்தனா். ஜெகதீஷை தேடி வருகின்றனா்.