சிறையில் தண்டனைக் காலம் நிறைவு: 41 மீனவா்கள் ராமேசுவரம் திரும்பினா்
இலங்கை சிறையில் 6 மாதங்கள் தண்டனை நிறைவடைந்த நிலையில் 41 மீனவா்கள் புதன்கிழமை ராமேசுவரம் வந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன் பகுதியிலிருந்து நாட்டுப்படகு, விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 41 மீனவா்களை இலங்கைக் கடற்படை கடந்தாண்டு கைது செய்தது. அவா்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது.
இந்த மீனவா்கள் சிறைத் தண்டனை நிறைவடைந்து அண்மையில் விடுவிக்கப்பட்டனா். இவா்கள் விமானம் மூலம் சென்னைக்கு வந்து, அங்கிருந்து புதன்கிழமை பாம்பன் வந்தனா். அவா்களை உறவினா்கள் கண்ணீருடன் வரவேற்றனா்.
இலங்கை அரசு தமிழக மீனவா்களுக்குத் தண்டனை, அபராதம் விதிப்பதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பறிமுதல் செய்த படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.