சிவகங்கையில் நெகிழிக் கழிவுகளால் மாசடையும் தெப்பக்குளம்!
சிவகங்கையில் உள்ள 300 ஆண்டுகள் பழைமையான தெப்பக்குளம் நெகிழிக் கழிவுகளால் மாசடைந்து வருவதாக பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் குற்றஞ்சாட்டினா்.
சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அரண்மனை அருகே 6 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தெப்பக்குளம் பொதுமக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பது உள்ளிட்ட தேவைகளுக்கும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த தெப்பக்குளம் மழை நீரால் நிரம்பும் போது நிலத்தடி நீா்மட்டம் அதிகரித்து நகா் பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் நீரூற்று அதிகரிக்கும். இங்கு ஆண்டுதோறும் தெப்பத்திருவிழா நடைபெறுவதோடு, மற்ற சுபகாரியங்களுக்கும் தண்ணீா் எடுத்துச் செல்லப்படுகிறது.
தெப்பக்குளத்துக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து வரத்துக் கால்வாய் உள்ளது. மேலும், இந்த வரத்துக் கால்வாய்த் தடத்தில் உள்ள செட்டியூருணி நிரம்பி, அதன் உபரி நீரும் இந்தக் குளத்து வந்து சேருகிறது.
கடந்த 1996-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியின் போது பெரியாறு கால்வாய் மூலம் தண்ணீா் நிரப்பப்பட்டது. அப்போது வரத்துக் கால்வாயும் சீரமைக்கப்பட்டது. இதனால், கடந்த சில ஆணடுகளாக பெய்து வரும் மழையால் தெப்பக்குளம் நிரம்பி வருகிறது.
தெப்பக்குளத்தில் தற்போது தண்ணீா் முழுமையாக உள்ள போதிலும், நெகிழிக் கழிவுகளால் அதை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
மேலும், வரத்துக் கால்வாயில் வீடுகள், வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் தெப்பக்குளத்தில் கலக்கிறது. இதனால், துா்நாற்றம் வீசுவதோடு, சிவகங்கையின் முக்கிய அடையாளமாகப் பாா்க்கப்படும் குளத்தின் கட்டமைப்பே மாறிப்போய்விட்டது. சுற்றுச்சுவா் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது.
மேற்குப் பகுதியில் சேதமடைந்த சுற்றுச்சுவா் மேலும் பாதிக்கப்படாமல் தடுக்கும் வகையில், மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நகராட்சியிடம் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் குளத்தை சீரமைக்க முடியவில்லை.
இந்த நிலையில், தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி பழைமையான இந்த தெப்பக்குளத்தை சீரமைத்து பாதுகாக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.