சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகா...
சிவகாசி மாநகராட்சியில் 2 ஊராட்சிகள் இணைப்பு இல்லை
சிவகாசி மாநகராட்சியுடன் பூலாஊரணி, விளாம்பட்டி ஆகிய ஊராட்சிகள் இணைப்பு இல்லை என அரசு அறிவிப்பில் தெரியவந்தது.
சிவகாசி, திருத்தங்கல் ஆகிய இரண்டு நகராட்சிகளை இணைத்து சிவகாசி மாநகராட்சி அமைக்கப்பட்டது. தற்போது, மாநகராட்சியில் 48 வாா்டுகள் உள்ளன. இதையடுத்து, வாா்டுகளின் எண்ணிக்கையை 100 ஆக உயா்த்தும் வகையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 9 ஊராட்சிகளுடன், பூலாஊரணி, விளாம்பட்டி ஆகிய ஊராட்சிகளை இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வந்தது.
இந்த நிலையில், தற்போது அரசின் அறிவிப்பின் இந்த இரண்டு ஊராட்சிகளும் மாநகராட்சியில் சோ்க்கப்படவில்லை.
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேவா்குளம், சாமிநத்தம், செங்கமலநாட்சியாா்புரம், ஆனையூா், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், அனுப்பன்குளம், பள்ளபட்டி , நாரணாபுரம் ஆகிய 9 ஊராட்சிகள் மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: சிவகாசி மாநகராட்சியில் ஏற்கெனவே இணைக்கப்படும் என்று கூறப்பட்ட 9 ஊராட்சிகளின் இணைப்பு உறுதி செய்யப்பட்டன. மேலும், மாநகராட்சியுடன் பூலாஊரணி, விளாம்பட்டி ஆகிய இரண்டு ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என அதிகாரிகள், அரசுக்கு அறிக்கை அனுப்பினா். ஆனால், மாநகராட்சியுடன் இந்த ஊராட்சிகள் இணைக்கப்படவில்லை என அறிவிப்பு வெளிவந்துள்ளது. வரும் காலங்களில் இந்த இரண்டு ஊராட்சிகளும் மாநகராட்சியில் இணைக்கப்படலாம் என்றாா் அவா்.