சிவலிங்கத்தை கையில் தாங்கிய சித்தர்
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை } வாலாஜாபாத் வரும் வழியில் 4 கி.மீ. தொலைவில் அய்யம்பேட்டையில் மோகாம்பரி அம்மன் கோயில் எதிரில் சாலை அருகே உள்ள அஸ்தலிங்கேசுவரர் என்ற சித்தர் கோயில் அமைந்துள்ளது.
சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்செங்கோடைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற சிவபக்தர் பல தலங்களை வழிபட்டு, தில்லை சிதம்பரம் சென்றடைந்தார். அங்கு சிவனிடம் லிங்கத்தைப் பெற்று, சித்தராக மாறி அஸ்தலிங்க சித்தர் என்று பெயர் பெற்றார். பின்னர், வடநாட்டு வழிபாட்டுத் தலங்களை வழிபட்டு, அய்யம்பேட்டையில் தங்கினார்.
அவர் இங்கு வாழ்ந்தபோது அவரது இரு சீடர்களான ஞானமணி சுவாமிகள், பொட்டி சாமி என்ற பிரம்மானந்த சுவாமிகள் ஆகிய மூவரும் மக்களின் குறைகளைப் போக்கினார்கள். அஸ்தங்கர் என்ற சித்தர் தனது வலதுகையில் சிவலிங்கத்தை எப்பொழுதும் வைத்திருந்ததால், "ஹஸ்தலிங்கேசுவரர்' என அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இப்பெயர், மாற்றம் பெற்று அஸ்தலிங்கேசுவரர் என அழைக்கப்படுகிறார்.
அஸ்தலிங்கசித்தர் தமது இறுதிக் காலத்தில் சமாதி அடைந்த இடத்தில் சிவலிங்கத்தை நிறுவி, கோயில் கட்டி மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஞானமணி சித்தருக்கும் இவ்வூரிலும், பொட்டிசாமி சித்தருக்கு முத்தியால்பேட்டையிலும் கோயில்கள் உள்ளன. இரு சித்தர்களின் அடையாளமாக அஸ்தலிங்கேசுவரர் கோயில் கருவறையில், லிங்கத்தின் இரு பக்கங்களிலும் நந்தியெம்பெருமானின் சிற்பத் திருமேனிகள் உள்ளன. லிங்கத்தின் இருபுறமும் நந்தி சிற்பங்கள் காணப்படுகின்றன.
அஸ்தலிங்கர் தியான மண்டபத்தில் தியானித்தால் நமது துன்பங்கள் முற்றிலும் அகலுவதை உணர முடியும். கோயிலுக்கு எதிரில் காரிய சித்தி விநாயகர் கோயில் கருவறையில் வலம்புரி விநாயகராக வடக்கு நோக்கி காட்சி அளிப்பது சிறப்பானது. தலமரமான வன்னிமரத்தை பெண்கள் மஞ்சள் கயிறு கட்டி தம் எண்ணம் நிறைவேற வழிபாடு செய்கின்றனர். கோயிலில் திருமணம் நிறைவேற அவிட்டம், கேட்டை நட்சத்திர நாள்களில் வலம்புரி விநாயகருக்கு நெல்பொரியால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.
}கி. ஸ்ரீதரன்,
(தொல்லியல்துறை } பணி நிறைவு).